ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2026 (Hero Men’s Asian Champions Trophy) அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி, நவம்பர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மற்றும் மொஹாலி நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், இந்திய, தென்கொரியா, ஜப்பான், மலேசியா, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.
தொடக்கம் முதலே இந்தியாவின் அதிரடி!
இதில் இன்று (நவம்பர் 4) மொஹாலியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா – தென்கொரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடினர். 4-வது நிமிடத்தில் ஷிலானந்த் லக்ரா முதல் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்குப் பதிலடியாக 9-வது நிமிடத்தில் தென்கொரியாவின் ஹான் சாங்ஜுன் கோல் அடித்து ஆட்டத்தை 1 என சமன் செய்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே இந்தியா மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
அடுத்தடுத்து கோல் மழை!
9-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்தார். தொடர்ந்து 13-வது நிமிடத்தில் ஷிலானந்த் லக்ரா தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். இரண்டாவது கால்பகுதியில் இந்தியாவின் கோல் வேட்டை மேலும் தீவிரமடைந்தது. 19-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். 20-வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் ஒரு கோலும், 25-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலும் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 6-1 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.
8 கோல்களுடன் அபார வெற்றி!
தொடர்ந்து 36-வது நிமிடத்தில் அங்கத் பிர் சிங் இந்திய அணிக்காக 7-வது கோலை அடித்தார். ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் விவேக் சாகர் பிரசாத் மேலும் ஒரு கோல் அடித்து இந்திய அணியின் கோல் எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தினார். இறுதியில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஷிலானந்த் லக்ரா, தில்ப்ரீத் சிங் ஆகியோர் தலா 2 கோல்களும், ஹர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், அங்கத் பிர் சிங், விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இறுதிப்போட்டியில் ஜப்பானுடன் மோதல்!
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் – மலேசியா அணிகள் மோதின. இந்தப் போட்டி நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் 0-0 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் ஜப்பான் அணி 5-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் நாளை (நவம்பர் 5) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா – ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
6-வது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா?
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, 6-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. லீக் சுற்றில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி, அரையிறுதியில் தென்கொரியாவுக்கு எதிராக 8 கோல்கள் என ஆதிக்கம் செலுத்தியுள்ள இந்திய அணி, இறுதிப்போட்டியிலும் வெற்றியைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.




