மத்திய பிரதேசத்தில் பாண்டுர்னா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கர்காட் காம்தி கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணியான வச்சலா பாய் துர்வே என்பவர் ஊட்டச்சத்து மாவு பெற்று சென்றுள்ளார். வீட்டில் அந்த மாவு பொட்டலத்தை திறந்து பார்த்த போது அதில் இறந்த நிலையில் பாம்பு குட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அக்குடும்பம் மட்டுமில்லாது அக்கிராமத்தையே கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக அங்கன்வாடிப் பணியாளர்களுக்கும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உணவு பொட்டலத்தை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அம்மாவட்ட பொறுப்பு ஆட்சியர் அக்ரிம் குமார் நியமித்துள்ளார். மேலும் அந்தப் பொட்டலத்திலிருந்து கைப்பற்றப்பட்ட உணவு மாதிரிகள் போபாலில் உள்ள மாநில உணவுப் பரிசோதனை மையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் ஆய்வக அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.




