இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு இனி விற்பனை செய்யப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரேசன்களில் வழங்கப்படும் இலவச அரிசி திட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அனைத்து மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் அரிசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு இனி விற்பனை செய்யப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய உணவுப் பாதுக்காப்புச் சட்டத்தின்கீழ் மாதம்தோறும் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு 5 கிலோ இலவச அரிசி வழங்கி வருகின்றது. ஆனால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இல்லாமல் மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வரும் கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் தற்போது பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், நாட்டில் உள்ள 3 அல்லது 4 மாநிலங்கள் தங்களின் இலவச திட்டத்துக்காக அதிக தானியங்களை வாங்கினால், மொத்த தானியங்களையும் அந்த மாநிலங்களுக்கு கொடுக்கும் சூழல் ஏற்படுவதாகவும், இதனால் நாடு முழுவதும் விலைவாசியை கட்டுப்படுத்துவது பிரச்னையாக இருப்பதாக உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது, “மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் மாநில அரசுகள் இலவச அரிசி திட்டத்தை அறிவிக்கின்றன. இலவச திட்டத்துக்கு தேவையான அரிசியை வழங்குவீர்களா என்று எந்த மாநிலமும் மத்திய அரசிடம் கேட்பதில்லை. மத்திய அரசு தன்னிடம் உள்ள இருப்புகளை பொறுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இயற்கை பேரிடரை சந்திக்கும் மாநிலங்களை தவிர, பிற மாநில அரசுகளுக்கு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் கோதுமை விற்பனையை கடந்த செவ்வாக்கிழமை மத்திய உணவு அமைச்சகம் நிறுத்தியுள்ளது. இந்த முடிவு திடீரென எடுக்கவில்லை என்றும், மத்திய அமைச்சர்களின் நீண்ட நாள்கள் ஆலோசனைக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.







