“ஸ்ரீமத் பாகவதம்” புகழ்பெற்ற, பழம் பெருமை வாய்ந்த, அழியாப் புகழ் பெற்றதொரு நூல். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அற்புதங்களையும், ஆற்றலையையும் அறிய, நல்லதொரு படைப்பாக கருதப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் மட்டுமே “பரம பக்தி,”தர்மத்தின் வழிகள்” போன்ற அனைத்து அம்சங்களை அலசி ஆராய முடிகிறது. இது சுமார் 18,000 சுலோகங்களாய்ப் பகுக்கப்பட்டு, வேத வியாசர் பெருமான், தமது புதல்வர் சுகர் ரிஷிக்கு, வேதம் போல் மனப்பாடமாய் சொல்லிச் சொல்லித் தந்ததாகவும், அதை சுகர் முனிவர் சர்வ, பய பக்தி, சிரத்தையோடு வேதம் போலச் சொல்லி வந்ததாகவும் அறிகிறோம்.
ஆனால், வியாசரோ, புகழ்பெற்ற புராணங்கள் 18, உப புராணங்கள் 24, மஹாபாரதம் எனும் அற்புத இதிகாசம் மற்றும் பிரம்ம சூத்திரம் இவைகளைப் படைத்த பின்னும், ஒரு மனக் குறையை உணர, நாரத முனிவரை வேண்டி தியானித்தார்.
நாரத மகரிஷி, “கிருஷ்ண பகவானின்” லீலா வினோதங்களையும், அதன் தாத்பர்யங்களையும் எழுத, பூர்ணமான மகிழ்வையும்,பெருமையும்பெறலாம் எனக் கூறிச் சென்றார். அந்த உபதேசத்தை ஏற்று எழுதப்பட்டதுதான் இவ்வரிய நூல்.
அபிமன்யூவின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான பரீட்சித்து மஹாராஜன் அஸ்தினாபுரத்தை ஆண்டுவந்த காலமது. ஒருநாள், வேட்டையாடச் சென்றிருந்த போது, தாகம் மிகுதியால், நீர் பருக வேண்டி, ஒரு ஆசிரமத்திற்குள் நுழைய, அங்கு ஒருவர் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து இருப்பதைக் கண்டான். தண்ணீர் வேண்டுமெனப் பலமுறை கூறியும் வாளாவிருந்ததைக் கண்டு தம்மை அவமானப்படுத்துவதாக நினைத்து, தன்னிலை மறந்து, அருகில் கிடந்த செத்த பாம்பு ஒன்றை எடுத்து, அவர் கழுத்தில் போட்டுவிட்டு, கோபத்துடன் அரண்மனைக்கு வந்துவிட்டான்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ரிஷி குமாரன், சக்தி அதிகம் வாய்ந்த “சிருங்கி”என்பவர், தன் தந்தையின் கழுத்தில் கிடந்த உயிரற்ற பாம்பைக் கண்டு, சினம் மிகக் கொண்டு, இந்த இழி செயலைச் செய்தவரை தட்சகன் என்ற பாம்பு இன்னும் 7 நாட்களில் கடித்துக் கொல்லும் என்று சாபமிட்டார். தியானம் முடிந்து கண்விழித்த ரிஷி, நடந்தவைகளை நினைத்து, வருந்தித் தன் மகனைக் கடிந்து கொண்டார். அறியாமல் மன்னன் செய்த பிழை மன்னிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாக இருந்தது.
அரண்மனைக்குச் சென்ற மன்னன் தான் செய்த செயலை எண்ணி, கோபம் மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை உணர்ந்தார். வருத்தம் மிக கொண்டு தமது பதவி, உடைமைகள், அனைத்தையும் உதறிவிட்டு, பெரியோர்கள் அறிவுரைப்படி, கங்கையாற்றின் கரையிலமர்ந்து, கிருஷ்ண பரமாத்மாவை முழு மனதுடன் தியானித்து இருந்தார். இந்த நிலை ப்ராயோபவேஷம் எனப்படும். அப்போது, சுகர் முனிவர் அங்கு வந்து, அரசருக்கு ஆறுதல் கூறி, 7 நாட்கள் பாகவதத்தை விடாமல் சொல்லிக் கேட்க மோட்சம் கிடைக்குமெனக் கூறி சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரீ பாகவதத்தை,12 ஸ்கந்தங்களாகப் பிரித்து, ஏழு நாட்களில் உபதேசித்து பக்தி செய்தார். இதை ஸப்தாஹம் எனக் கூறுவர். பாராயணம் முடிந்ததும் பரீட்சித்து மன்னர் மோட்சமடைந்தார்.
சின்னதொரு சம்பவம் என எதையும் நினைப்பது தவறு. கோபத்தினால் ஏற்பட்ட கடும் விளைவுகள், துயரங்கள், இழிவு, மரணம் இவை அவர் பட்ட வலிகளைச் சொல்லும். இப்பேருண்மையை அதை நீக்கி வாழ நாம் கற்க வேண்டிய அவசியத்தைப் பற்றி நமது தெய்வப்புலவர் கூறுவது,
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க,காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
–சுப்பிரமணியன்








