ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் விழாவில் ஆயிரக்கணக்கான கோலங்களை போட தீர்மானித்திருப்பதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்ப், சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி இறுதியாக உறுதி செய்யப்பட்டது. ஜனவரி 20ம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்கவிருக்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவின் போது, கோலமிட்டு இருவரையும் வரவேற்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து 1800க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் ஆயிரக்கணக்கான கோலங்களை போட உள்ளதாக இந்திய அமைப்பான இந்தியா ஸ்போரோ ஃபோரம் அமைப்பு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.







