முக்கியச் செய்திகள் தமிழகம்

‘எவிடென்ஸ்’ கதிருக்கு ஐரோப்பிய கவுன்சிலின் உயரிய விருது

சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிருக்கு, ஐரோப்பிய கவுன்சிலின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு எவிடென்ஸ் அமைப்பினை உருவாக்கி, மனித உரிமை பிரச்னைகளுக்காக 25 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வருகிறார் ‘எவிடென்ஸ்’ கதிர் (எ)ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை பொது அரங்கிற்குள் கொண்டு வருவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித் தருவதிலும் முனைப்போடு இயங்குகிறது எவிடென்ஸ் அமைப்பு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சாதியப் பிரச்னை, ஆணவக் கொலை, ஒடுக்கப்பட்டோர் மீதான தாக்குதல் என தமிழ்நாட்டின் எந்தவொரு இடத்திலும் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் நேரடியாக அங்கு ஓடோடி சென்று கள ஆய்வு செய்து உண்மையை அம்பலப்படுத்தி வருகிறார் கதிர். அத்துடன் மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை செய்து நீதியும் பெற்றுத்தருகிறார்.

2016-21ஆம் ஆண்டு வரையிலான சாதியக் கொலைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பு அறிக்கை ஒன்றை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில், “2016 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரை 300 பட்டியலின மற்றும் பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 13 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற 229 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 28 வழக்குகள் காவல்துறையினரிடம் விசாரணையில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது. இப்படியாக பல பிரச்னைகளையும் ஆவணப்படுத்தியுள்ளது எவிடென்ஸ்.

இதனால் எவிடென்ஸ் கதிர் மீது பல தருணங்களில் தாக்குதல்களும் நடத்தப்பட்டது. ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சமரசமற்று இயங்கி வருகிறார். இந்த நிலையில் எவிடென்ஸ் கதிரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக 2022ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய அமைப்பின் உயரிய விருதான ரவுல் வாலன்பெர்க் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இருந்து இவ்விருதை பெற்ற முதல் நபர் தான் என பெருமிதப்படும் எவிடென்ஸ் கதிர், “கடந்த 25 வருடங்களாக நான் மேற்கொள்ளும் பணிகளுக்காக எனக்கு கிடைத்த அங்கீகாரம் இது. என் மீது பல சமயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்துள்ளது. எனக்கு கிடைத்த இந்த விருதை உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை சர்வதேச அரங்கிற்கும் எடுத்துச்செல்லும் ஒரு கருவியாக இவ்விருதை தான் கருதுவதாகவும் எவிடென்ஸ் கதிர் கூறுகிறார்.

எவிடென்ஸ் கதிருக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “உயரிய விருதைப் பெற்ற ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜுக்கு வாழ்த்துகள். இந்தியாவில் பட்டியலின மக்களின் உரிமைகளை வைத்துதான் மனித உரிமையை பார்க்க வேண்டும். உங்களின் எதிர்கால பணிகள் சிறக்க வாழ்த்துகள்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபோலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பட்டியல் – பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் செயற்பாட்டாளர் ‘எவிடென்ஸ்’ கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். அவரது பணி சிறப்புறத் தொடர வாழ்த்துகிறேன்” என்றார்.

சாதிய பிரச்னைகளுக்கு எதிரான எவிடென்ஸ் கதிரின் குரல் தொடர்ந்து ஒலிக்க வாழ்த்துகள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது! – சென்னை உயர்நீதிமன்றம்

Nandhakumar

விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை: சீமான்

Ezhilarasan

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா

Gayathri Venkatesan