வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல், கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. இந்த புயலானது, தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 550 கி.மீ தொலைவில் உள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவில், மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த புயலானது நாளை புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையில் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 10ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று தமிழக கடற்கரைப் பகுதிகளில், காற்றின் வேகமானது 40 முதல் 60 கிலோ மீட்டர் அளவில் வீசக்கூடும். பத்தாம் தேதி வரை தமிழக கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும். இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, இனிதான் கனமழை தொடங்கும். புயல் எப்போதும் ஒரே வேகத்தில் இருக்காது. உள்புறமும் இயக்கம் இருக்கிறது. வெளிப்புறத்திலும் இயக்கம் இருக்கிறது. குளிர் அதிகமாக இருப்பதற்கு, வடக்கு திசையில் இருந்து வீசும் காற்றுதான் காரணம்” என்று தெரிவித்தார்.









