நெருங்குகிறது ’மாண்டஸ்’ புயல் – அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு

மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு…

மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 500 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீ தொலைவிலும் நிலவுகிறது. இது வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையாலும், கடலானது சீற்றத்துடன் காணப்படுவதாலும், தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.