கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை காரணமாக 32 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுத்து வரும் நடவடிக்கைகள், வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.