ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஜோடி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண் தரப்பினர் மணமகன் தரப்பை சேர்ந்த பெற்றோர்களை வீடு புகுந்து தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பார்த்தசாரதி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ரா இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் பார்த்தசாரதி – சுசித்ரா இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 18 ம் தேதி வீராபுரம் கன்னியம்மன் நகர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் சுசித்ரா காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் ; ராகுல்காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்‘ – அசாம் மாநிலத்தில் தடுத்து நிறுத்தம்!
இதனையடுத்து பெண்ணின் பொற்றோர் பார்த்தசாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பார்த்தசாரதியின் தந்தையான அண்ணாதுரையை அதே கிராமத்தில் அரை நிர்வாணமாக தரையில் அமர வைத்து அனைவரில் காலில் விழ வலியுறுத்தியும் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் வீடியோ காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.







