குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 58 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டிக்காக டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. குஜராத் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குஜராத் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
சென்னை அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி என்ற நிலையில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்யலாம். 2-ல் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். எனவே இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் அமையும் என்பதில் ஐயமில்லை.







