அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைவு – மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியைக் காட்டிலும், திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு – மீட்ப்புபணிகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

அதிமுக ஆட்சியைக் காட்டிலும், திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு – மீட்ப்புபணிகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியைக் காட்டிலும் திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முன்கூட்டியே வெளியில் வந்த அவலம் நிகழ்ந்ததாகவும் கூறினார். திமுக ஆட்சியில், 3,632 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, முன்னதாகவே வெளியில் செல்வது குறைக்கப்பட்டுள்ளது என்றும், 53 சதவீதம் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 சதவீதம் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

கடந்த ஓராண்டில் 268 கொலைகள் நடைபெறாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளதோடு, திருவிழாக்களில் பங்கேற்ற 1.08 கோடி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பல முக்கிய நிகழ்வுகளில் அரசு திறம்பட செயலாற்றியுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், கொடுங்குற்ற வழக்குகளில் அரசு ஈவு, இரக்கமின்றி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், 1558 கொலைகள், 103 கொள்ளைகள் கடந்த ஓராண்டில் நடைபெற்றுள்ளது, இருப்பினும் அதிமுக ஆட்சியை விட கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல், கூலிப்படையினரின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், விரைவில் முற்றிலும் தடுக்கப்படும் என்றும், திமுக ஆட்சியில் எந்த சூழலிலும் துப்பாக்கிச் சூடு இல்லை எனவும், லாக் அப் மரணங்களில் எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள் எனவும், திமுக அரசு எதையும் மறைக்காது என்றும் உறுதிபட கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12 லட்சம் FIR பதிவு செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 8.65 லட்சம் FIR மட்டுமே பதிவாகி உள்ளதாகவும், திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளதோடு பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.