சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலை போர் மேன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் நேற்று திடீரென எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் உள்ள 7 அறைகள் தரைமட்டமாகின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணகுமார், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன், போர் மேன் சுரேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாகி இருந்த அவர்கள் மூவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பட்டாசு ஆலையின் போர் மேன் சுரேஷ் மற்றும் ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.







