இந்தியா – கனடா உறவில் விரிசல்..? – என்னதான் நடக்கிறது..?

கடந்த சில நாட்களாக இந்தியா – கனடா இடையே ராஜாங்கரீதியான் உறவில் சிக்கல் மற்றும் பதற்றம் நீடித்து வருகிறது. கனடாவிற்கு இந்தியாவிற்கும் என்னதான் பிரச்னை விரிவாக பார்க்கலாம்.  கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர்களில்…

கடந்த சில நாட்களாக இந்தியா – கனடா இடையே ராஜாங்கரீதியான் உறவில் சிக்கல் மற்றும் பதற்றம் நீடித்து வருகிறது. கனடாவிற்கு இந்தியாவிற்கும் என்னதான் பிரச்னை விரிவாக பார்க்கலாம். 

கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப்சிங் நிஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த  கொலையில் இந்தியா மீது குற்றம் சுமத்திய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியத் தூதரை கனடாவில் இருந்து வெளியேற்றினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசும்போது ஹர்தீப் கொலையில் இந்தியா மீது குற்றம் சுமத்தி பேசி கண்டனத்தை பதிவு செய்தார்.

காலிஸ்தான் தனி நாடு கோரும் பஞ்சாபின் பிரிவிவாத ஆதரவாளர்களில் முக்கியமானவர் ஹர்தீப்சிங் நிஜார். இவர் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்ட பர் சிங் புரா கிராமத்தை சேர்ந்தவர். பிழைப்பு தேடி கடந்த 1997-ல் கனடாவுக்கு இடம்பெயர்ந்தார். ஹர்தீப்புக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் தீவிரவாத ஆதரவு நிலை நிலவுகிறது. இதனால், அங்கிருந்தபடி காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவராகவும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பின் கனடா பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்றார் நிஜார். இந்த இரண்டு அமைப்புகளுமே இந்தியாவில் தடை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஹர்தீப்பை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு எனவும் தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. எனினும், இந்தியாவுக்கு எதிரான ஹர்தீப்பின் தேசவிரோத நடவடிக்கைகள் கனடா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான்  ஹர்தீப் கனடாவின் சுரே நகரின் குருத்துவாரா அருகில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்களால் கடந்த ஜுன் 18-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை  கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது எனவும், இந்தியா சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நாடு என்று  மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்தும் கனடா, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

இந்தியத் தூதரகத்தின் அதிகாரி பவன்குமார் ராய் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற கனடாவின் பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்ட சம்பவம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  இதற்கு பதிலடியாக, டெல்லியிலுள்ள கனடா நாட்டின் முக்கிய அதிகாரியான ஒலிவியர் சில்வர்ஸ்டரை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல கனடா தூதரகத்தில் உள்ள அதிகாரி கேமரூன் மேக்கேவை வெளியேற உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அவரை நேரில் அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதையடுத்து, கேமரூன் மேக்கேவ் கோபத்துடன் வெளியேறி சென்றார்.

காலிஸ்தான் தலைவர் கொலை சம்பவத்தில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனடா நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.