தமிழக அரசு கல்விக்கு செலவிடும் பணத்தை செலவாகப் பார்க்காமல் முதலீடாகப் பார்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் இயங்கிவரும் டிபி ஜெயின் கல்லூரி ஒரு சில துறைகளில்
அரசு உதவி பெறும் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக
கல்லூரியை முழுமையாக சுயநிதி கல்லூரியாக மாற்றும் நோக்கில் அரசு உதவி பெறும் துறைகளில் மாணவர் சேர்க்கையை நடத்தாமல் கல்லூரி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, கடந்த பல ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் பணி நிறைவு பெறும்
பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதை கல்லூரி நிர்வாகம்
நிறுத்தி இருப்பதாகவும், அரசின் விதிமுறைகளுக்குப் புறம்பான கல்லூரி
நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்த 11 பேராசிரியர்கள் கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவற்றையெல்லாம் கண்டித்து டி பி ஜெயின் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
அங்கு பேசிய அவர், டி பி ஜெயின் கல்லூரி சுயநிதி கல்லூரியாக மாறிவிட்டால்.
நாளை தமிழகத்தில் உள்ள 250 கல்லூரிகளிலும் இதே நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை என எச்சரித்தார். தற்போது கல்வி வியாபாரமாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்த அவர், அரசு கல்விக்கு செல்விடும் பணத்தை செலவாக பார்க்க கூடாது எதிர்காலத்திற்கான மூலதனமாக பார்க்க வேண்டும். இதே சூழல் நீடித்தால், பெண் கல்வியை பாதிக்கிற மிக பெரிய ஆபத்தாக அமையும் என எச்சரித்தார். டி.பி.ஜெயின் கல்லூரியின் நய வஞ்சக முயற்சிக்கு அரசு அனுமதி வழங்க கூடாது என
முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
பின்னர், நியூஸ்7 தமிழுக்கு பேட்டி அளித்த கே.பாலகிருஷ்ணன், அரசு உதவி பெறும் கல்லூரிகளை சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றினால் சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல வழி இல்லாமல் போகும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான காலி இடங்கள் இருக்கும் நிலையில், அதை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ள தகுதியான ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும். சமூகத்தில் கல்வி கண் போன்றது, அந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்தால் அது கல்வியை சீர்குலைக்கும் என்றார்.
-ம.பவித்ரா







