சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா!

சென்னை ஐஐடியில் புதிதாக மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தமிழகம் மற்றும் 15 மாநிலங்களைச் சேர்ந்த…

சென்னை ஐஐடியில் புதிதாக மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தமிழகம் மற்றும் 15 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடந்த 19ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

அதற்கு அடுத்தடுத்த நாள்களில் மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஐஐடியில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐஐடி.யில் 7,590 பேர் தங்கியுள்ளனர். அங்குள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவுகளின்படி 171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தாக்கிய மாணவர்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை. அதேபோல, வெளியாள்களும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 4 பேருக்கு டெங்கு, டைபாய்டு, சின்னம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஐஐடியில் தற்போது நேரடி வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பி.ஏ2-வகை வைரஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.