கொரோனா அச்சத்தால் வீரர்கள் விலகல்: ஐபில் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா? பிசிசிஐ விளக்கம்

ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் விலகினாலும், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா கொரொனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாள்தோறும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதிலும்…

ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் விலகினாலும், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா கொரொனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாள்தோறும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் குறிப்பிட்ட நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் டி20 தொடர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கும்போதே கொரொனா பரவல் அதிகரிக்கத்தொடங்கியது. இதனால் போட்டிகளைக் காண விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. போட்டியின்போது கொரோனா வழிமுறைகள் கராராக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ரவிசந்திர அஸ்வின் சுற்றிலிருந்து விலகி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் ‘ கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வருவதால், எனது குடும்பத்திற்கு உறுதுணையாக நின்று ஆதரவு கொடுக்க வேண்டும். இதனால் போட்டியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன்’என்று கூறினார்.

இந்நிலையில் ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை ஆகியோரும் விலகியுள்ளனர்.

இந்த விலகுதல் தொடர்பாக ஆன்ட்ரூ டை கூறுகையில் ‘ இந்தியாவில் முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன் எனது நாட்டிற்குச் செல்ல வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார். ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக தாங்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அச்சத்தால் வீரர்கள் தொடர்ந்து விலகுவதாக அறிவித்து வருவதால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஐபிஐல் டி20 போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்று பிசிசிஎல் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.