தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டி வரும் நிலையில் அருவிகளில் உற்சாக குளியல் இடும் சுற்றுலா பயணிகள் அதனையடுத்து படகு சவாரி செய்வதற்காக படகு குழாமில் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் படிபடிப்பாயக களைகட்ட துவங்கி உள்ளது.பழைய அருவி,மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பாக ஆண்டுதோறும் ஐந்தருவி செல்லும் சாலையிலுள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி தொடங்கப்படுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு குளம் நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதால் அருவிகளில் குளித்துவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
கூட்டம் சற்று அதிகமாக இருப்பினும் காத்திருந்து படகு சவாரி செய்தப்படியே இயற்கையின் அழகை ரசித்து பார்க்கின்றனர்.இந்நிலையில் இன்று வார விடுமுறை என்பதால் இயல்பை விட குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
வேந்தன்







