மனித வெடிகுண்டாக மாறி திருச்சி ரயில் நிலையத்தை வெடிக்க வைப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பிய நபருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த செல்வராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மனித வெடிகுண்டாக மாறி திருச்சி ரயில் நிலையத்தில் வெடிக்க வைக்க போவதாக காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தாரணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் 5ஆம் வகுப்பு படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். மனுதாரருக்கும் தேவராஜ் என்பவருக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக தேவராஜ் பெயரில் புதிய மொபைல் எண் வாங்கி, மனித வெடிகுண்டாக மாறி திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டை வெடிக்க வைப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு மையத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஏற்கனவே மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த முறை ஜாமீன் மனுவில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
மனுதாரரை கைது செய்து 2 மாதங்களாகியும் இதுவரை காவல் துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு நீதிபதி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார். மேலும், தினமும் காலை 10:30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.
-ம.பவித்ரா








