நடிகர் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் எச்சரிக்கை வாசகம் முறையாக இல்லை என தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் நடவடிக்கையை தொடரவில்லை என மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்சார் போர்டு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும், மேற்கொண்டு தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும், தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பாதிப்பால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாக தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துதல் தடை சட்ட விதிகளை மீறியதாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தார்.







