போதை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் நாளை தான் சிறைச்சாலையில் இருந்து வெளியே வருவார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த 3 ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோரை மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைத்தனர். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு நேற்று மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவில்லை. இன்று அவர் வெளியே வருவார் என எதிர்பார்த்த நிலையில், சட்ட சிக்கல்கள் இருப்பதால் அவர் இன்று சிறையில் இருந்து வெளியே வரமாட்டர் எனவும் நாளை தான் வெளியே வருவார் எனவும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







