குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பாஜக அபார முன்னிலை பெற்றுள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக , காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
குஜராத்தில் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 63% வாக்குகளும், டிசம்பர் 5ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 65% வாக்குகளும் பதிவாகின. பெரும்பான்மை பெற 92 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதால் அங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதேபோல் 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் கடந்த நவம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
குஜராத்தில் தொடர்ந்து பாஜக அபார முன்னிலை பெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதிய நிலவரப்படி காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. குஜராத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில், போட்டி நிலவி வருவதால், வாக்கு எண்ணிக்கை சூடு பிடித்துள்ளது.







