குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 7வது முறையாக வெற்றி என்கிற சாதனையை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது. இதன் மூலம் மேற்குவங்கத்தில் தொடர்ச்சியாக 7 சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றியடைந்த இடதுசாரிகளின் சாதனையை பாஜக சமன் செய்ய உள்ளது.
நாடுமுழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 1 மற்றும் 5ந்தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 155 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் தொடர்ச்சியாக 7வது சட்டப்பேரவை தேர்தலில் குஜராத்தில் பாஜக வெற்றி அடைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 1998 முதல் தொடர்ச்சியாக சுமார் 25 வருடங்களாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஆட்சியை தொடர்வதை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்தியாவில் ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிக தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி என்கிற சாதனை தற்போது இடதுசாரிகள் வசம் உள்ளது. மேற்குவங்கத்தில் கடந்த 1977ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி முதல் 2011ம் ஆண்டு மே 13ந்தேதி வரை தொடர்ச்சியாக சுமார் 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்றது. இந்த கால கட்டத்தில் தொடர்ச்சியாக 7 சட்டப்பேரவை தேர்தல்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தற்போது குஜராத்தில் தொடர்ச்சியாக 7வது சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் நிகழ்த்திய சாதனையை பாஜக சமன் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.







