சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக 40 அரசு அலுவலர்களை நேரில் வர சொல்லி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2011-2019 வரையிலான அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக சீனிவாசன் என்பவர் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் 8 வட்டார வளர்ச்சி அதிகாரிகள், 10 உதவி பொறியாளர்கள், 20 பணி மேற்பார்வையாளர்கள் 2 ஒன்றிய பொறியாளர்கள் உட்பட 40 அதிகாரிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி திட்ட அலுவலர் முன்னிலையில் நேரடி தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணை என்பதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணி மாறுதலில் சென்று உள்ள நிலையில் இன்று 11 மணிக்குள் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசாரணைக்கு வரவேண்டும் என உதவி திட்ட அதிகாரி அன்னபூரணி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது வரை 8 அதிகாரிகளே விசாரணைக்கு வந்துள்ளனர்.








