சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்வோம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை கோரியும், அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தனி நீதிபதி விசாரித்து பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து 2 வாரங்களில் தீர்வு காண வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்வோம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றார். அதிமுக பொதுக்குழு குறித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்வோம் என்றும் தெரிவித்தார்.
இரட்டை தலைமை வேண்டாம் என்பதற்காகவே நாங்க பொது குழுவை நடத்தினோம் என்றும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து கட்சியை வழிநடத்துவதை ஏற்று கொள்ள மாட்டோம் என்றும் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








