இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூட்டிக்கொள்ளும் விழாவில், இந்திய அரசு சார்பில் துணைக் குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார்.
இங்கிலாந்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, தனது 96வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸுக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வெஸ்ட்மினிஸ்டர் அபே பகுதியில் இன்று நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். இங்கிலாந்து ராணியாக கமிலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார். இவ்விழாவில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மீகன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படியுங்கள் : அம்பானி மருமகளிடம் இருக்கும் உலகப் புகழ்பெற்ற வைர நெக்லஸ் – கின்னஸ் சாதனை படைத்த இதன் விலை தெரியுமா??
இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது. இதனை ஏற்று, இந்திய அரசு சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.







