அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு…


தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் அனுமதியில்லை. கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பேருந்து, பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதியளிக்கப்படும், நின்றுகொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து மூன்று பயணிகளுக்கு மட்டுமே அனுமதி, ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் தவிர்த்து இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் நபர்களை கண்காணிக்க தொடர்ந்து இ-பாஸ் முறை செயல்படுத்தப்படும்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதியளிக்கப்படும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.