தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 124 முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்கான முன்பதிவு இணையதளத்தில் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 63 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் முன்பதிவு செய்தவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.







