கோமாளி பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம், கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தவர் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் வாட்ச்மேன், பப்பி ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், கன்னடத்திலும் நடித்து வருகிறார்.
இவருடைய பெற்றோருக்கு ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி கவனித்துக் கொண்ட சம்யுக்தா ஹெக்டே, அப்போது இதுபற்றி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டேவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் சம்யுக்தா தெரிவித்துள்ளார். அதில், எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி, அனைத்து முன்னேற்பாடுகளுடன் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா 2 வது அலை நாட்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஏராளமானவர்கள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் ஏராளமான சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போது நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் பாதிக்கப்பட்டுள்ளார்.







