கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவின் போது, பொது தரிசனத்திற்கு பக்தர்கள் கலந்து கொள்ள தடைவிதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆடிக் கிருத்திகையையொட்டி, அதிகமான கூட்டம் கூடும் என்பதால், முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுள்ளார். அதன்படி, மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில், பழமுதிர் சோலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய கோயில்களில், வரும் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அவர் அறிவித்துள்ளார். அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடி கிருத்திகை விழாவை நடத்துவர் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இதே போல, திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில், வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். அதன்படி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்,சமயபுரம் மாரியம்மன் கோயில், வயலூர் முருகன் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் மற்றும் மலைக்கோட்டை வளாகத்தில் உள்ள கோயில்களில், 2 நாட்களுக்கு பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை வடபழனி கோயிலில், ஆடிக் கிருத்திகை நாளில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இதேபோல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதான கோயில்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று முதல் 3-ம் தேதி வரையிலும் , ஆடி அமாவாசை தினமான ஆகஸ்ட் 8-ம் தேதியும் பொதுமக்கள் கூட்டத்தை தடுக்க கோயில்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.









