புதிதாக கட்டப்பட்டிருந்த கொரோனா மாதா சிலையை, மாவட்ட நிர்வாகம் இடித்து உடைத்துள்ளது. இந்த கோயில் கட்டப்பட்டது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டது. இந்த தேவிக்கு தினசரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலும் ’கொரோனா மாதா’ என்ற பெயரில் சிலை ஒன்றை அமைத்தனர்.
பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள சுக்லாப்பூர் என்ற கிராமத்தில், இந்த சிலையை கிராம மக்கள் அமைத்தனர். சாமிக்கும் முகக்கவசத்தை அணிந்து வடிவமைத்தனர். கடந்த ஒன்றரை வருடமாக மக்களை வதைத்து வரும் கொரோனாவை விரைவில் ஒழிக்க வேண்டும் என்றும் தினமும் புனித நீர் தெளித்து பூஜைகள் செய்தும் வந்தனர். இந்தச் செய்தி அந்த மாநிலத்தில் தீயாய் பரவியதை அடுத்து, அக்கம் பக்கத்து கிராமத்தினரும் கொரோனா மாதாவை வழிபட குவிந்தனர்.

கோயிலுக்கு வருபவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதை அடுத்து, முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபட்டனர். இந்த கோயிலில் மக்கள் வழிபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சுக்லாப்பூர் கிராமத்திற்கு வந்தனர். கட்டப்பட்டிருந்த கொரோனா மாதா கோயில் கட்டுமானத்தை உடைத்து அங்கிருந்து அகற்றினர். இதுபற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, லோகேஷ் குமார் என்பவர், அந்தப் பகுதியினரிடம் பணம் வசூலித்து இந்தக் கோயிலை கட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் மக்கள் சிக்கிக் கொள்ளாமல் தடுப்பதற்காக, அதை அகற்றியுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.







