யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் டெல்லி தண்ணீரில் தத்தளிக்கிறது.
வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவையும் விட 3 மீட்டர் அதிகமாக 208 புள்ளி 48 மீட்டர் என்ற உயரத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி டெல்லி நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
https://twitter.com/RKhabr/status/1679502536833908736?s=20
ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், யமுனை நதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தண்ணீர் திறப்பை நிறுத்தக்கோரி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தபோதும், மழை காரணமாக உபரிநீர் திறக்கப்படுவதை நிறுத்த இயலாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இதனால் நீர்வரத்து காரணமாக யமுனை நீர்மட்டம் உயர்ந்து, டெல்லி நகருக்குள் வெளியேறும் வெள்ள நீரால், தலைநகரே தண்ணீரில் தத்தளிக்கிறது.
டெல்லி செங்கோட்டை பகுதி, காஷ்மீரி கேட், விஸ்வகர்மா காலனி, யமுனா பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள கெஜ்ரிவால் மற்றும் கேபினட் அமைச்சர்களின் அலுவலக பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், டெல்லி சட்டப்பேரவை வளாகம் மற்றும் கெஜ்ரிவால் இல்லம் அமைந்துள்ள பகுதி அருகிலும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்து 16 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்களை நகர நிர்வாகம் வெளியேற்றியுள்ளது.
https://twitter.com/Rahul_Manav11/status/1679501671658061824?s=20
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்களை ஜூலை 16ம் தேதி வரை மூடி வைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. ஆங்காங்கே வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொண்டதால் பல சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 12 குழுவினர் வெள்ள நீரில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







