பிபிசி யின் ஆவணப்படத்தை திரையிடுவதில் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் இரு மாணவர் அமைப்புகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசி யின் ஆவணப்படத்தை திரையிடுவதில் புதுச்சேரி
மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புக்குள் கடும் வாக்குவாதம் மோதல்
ஏற்பட்டும் சூழ்நிலை ஏற்பட்டதால், பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இங்கு 5
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் இடதுசாரி, வலதுசாரி மற்றும் அம்பேத்கரிய மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மாணவ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிபிசி நிறுவனம் பிரதமர் மோடி பற்றிய ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த படத்தை இடதுசாரி மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் பல்வேறு விடுதிகளில் இன்று திரையிடப்படும் என்று அறிவித்திருந்தனர். அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட இடதுசாரி அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் ஒன்று திரண்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாலையில் நின்று, தனித்தனியாக பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பதிவிறக்கம் செய்து பார்வையிட்டனர். அப்போது, அங்கு வந்த வலதுசாரி மாணவர் அமைப்பினர்கள் இடதுசாரி மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பதிலுக்கு இவர்களும் முழக்கங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இத்தகவல் அறிந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பு மாணவர்களையும் விலக்கி விட்டனர்.
இதுகுறித்து காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் இருக்க பல்கலைக்கழக வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக புதுச்சேரி மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
– யாழன்