தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் பணி நியமனங்கள் ஒப்பந்த முறையில் தனியார் மயமாக்குதலைக் கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அரசே நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமங்கள் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிர்வாகமே தேர்வு செய்யாமல் தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்திட டெண்டர் விடப்படுவது தனியார் மயமாக்குதலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கையாகும். கடந்த 11.07.2022 அன்று நடைபெற்ற ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான கூட்டத்தில் தமிழக முதல்வர் அவர்கள் போக்குவரத்து கழகம் ஒருபோதும் தனியார் மயமாக்குதலுக்கு அனுமதிக்கமாட்டார் என்று போக்குவரத்து அமைச்சர் அவர்கள் பேசியுள்ளார் . ஆனால், தற்பொழுது போக்குவரத்துப் பணியாளர்கள் தேர்வு செய்ய டெண்டர் பணிகள் மேற்கொண்டு இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், வேலை வாய்ப்பு பறிபோகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது .
அதோடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் பணிக்காக காத்திருக்கும் இந்நிலையில் ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் தேர்வு செய்வதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற மிகுந்த வாய்ப்புள்ளது. எனவே, மேற்படி தனியார் மயமாக்கும் தமிழக அரசு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தின் நடவடிக்கைகள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் அரசே நேரடியாக பணி நியமனங்கள் செய்திட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








