பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பணியாளர் பற்றாக்குறை 3 முறைக்கு மேல் கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக 16 ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 60 ஒப்பந்ததாரர்களுக்கு 1,35,590 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு, 571 பூங்காக்கள் பராமரிப்புக்காக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பூங்காத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பூங்கா பராமரிப்பை சரி வர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு 1,35,590 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது (14.06.2022 – 07.07.2022 வரை ).
பூங்கா பராமரிப்பு பணிகளில் காவலர், தூய்மை பணியாளர், தோட்டப் பராமரிப்பாளர் போன்ற ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விட குறைவான அளவில் பணியாளர்கள் இருந்தால் ரூ.500 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் தொடர்ந்து 3 முறைக்கு மேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








