முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் வழக்கமான அரசு  சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் காரணமாக சில நாட்கள் ஓய்வில் இருந்துவிட்டு பின்னர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் வழக்கமான அரசு  சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் காரணமாக சில நாட்கள் ஓய்வில் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் பணியில் ஈடுபட்டார். இன்று காலை கூட செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைவெள்ள தடுப்புப் பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்திருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது முதலமைச்சருக்கே தொற்று உறுதியாகியுள்ளது. முதலமைச்சர் ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.