வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மழை, வெள்ளத்திற்கு 34 பேர் பலியாகியுள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மணாலி, குலு, கின்னவுர் மற்றும் சம்பா ஆகிய இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல உத்தர காண்டில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை தாண்டி செல்கிறது. அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து பஞசாப் மாநிலத்தில் 13 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஹரியானாவில் 12ஆம் தேதி வரை பள்ளிகள்க்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், டெல்லி, நொய்டாயில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசியாபாத்தில் 15ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்ட்டுள்ளது.







