தேனியில், செல்போனை சர்வீஸ் செய்ய மறுத்த நிறுவனம், பாதிக்கப்பட்ட போன் உரிமையாளருக்கு 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் புதிய போன் வழங்கிட வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், அரண்மனை புதூரை சேர்ந்த மீனா என்பவர் தேனியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பிரபல மொபைல் கடையில், ஆப்பிள் போன் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக செல்போன் தண்ணீரில் தவறி விழுந்துள்ளது. அதனைத்தொடர்ந்து தனது ஆப்பிள் போனை, சர்வீஸ் செய்து தரும்படி மொபைல் நிறுவனத்தை நாடியுள்ளார்.
அப்போது, அப்படியெல்லாம் சர்வீஸ் செய்து தர முடியாது என அந்த நிறுவனம் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செல்போன் உரிமையாளரான மீனா தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘‘பதிவு செய்யாத முதியோர் இல்லங்களை அனுமதிக்கக் கூடாது’ – சென்னை உயர் நீதிமன்றம்’
அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் செல்போன் உரிமையாளருக்கு செல்போன் நிறுவனத்தார் உரிய முறையில் பழுது நீக்கி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்துகொடுக்கப்படவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான செல்போன் உரிமையாளர் மீனாவுக்கு மொபைல் நிறுவனம், 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மற்றும் புதிய ஆப்பிள் போன் வழங்கிட வேண்டும் என நீதிபதி சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.








