மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவு பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 2,11,115 பேர் விண்ணப்பித்துள்ளனர். 1,67,387 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1,56,214 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் மேலும் இரு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேர https://tneaonline.org/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை மாதம் 19ந்தேதி வரை இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ந்தேதி முதல் 18ந்தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ள உயர் கல்வித்துறை, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ந்தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.








