கவலையளிக்கும் விதமாக பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில் துறை உற்பத்தி குறியீடும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என பார்க்கலாம் …
இந்தியாவில் பணவீக்கமானது , சமீபத்திய மாதங்களாக குறையத் தொடங்கி உள்ளது என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், உணவு பொருட்களின் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதம் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே ஜூலை மாதம் 6.75 சதவீதமாக இருந்தது. பணவீக்க விகிதமானது 6.71 சதவீதத்திலிருந்து 7.1 ஆக அதிகரித்துள்ளது. பணவீக்கம் உயரும் போது, உணவு பொருட்கள் விலையானது கடுமையாக ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் சில்லறை பணவீக்க விகிதமானது 5 மாதத்தில் இல்லாத அளவாக 6.75 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் 7.62 சதவீதமாக உச்சம் தொட்டுள்ளது. இது அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை பொழிவு அதிகமாக இருந்ததால் உணவுப்பொருட்கள் மற்றும் இதர உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்து மற்றும் விநியோக அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் கன மழையால் விவசாய விளை பொருட்களை முழுமையாக அறுவடை செய்ய முடியவில்லை. இதன் காரணமாக சில்லறை பணவீக்க விகிதமானது மீண்டும் உச்சம் எட்டியுள்ளது. குறிப்பாக பல உணவு பொருட்களின் விலை,கடந்த மார்ச் மாதம் முதல் , மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றது. விலைவாசி உயர்வு விகிதம் 6.75 சதவீதம் முதல் 7.75 சதவீதம் என கூறப்பட்டாலும், நடைமுறையில் உனவுப்பொருட்களின் விலை பத்து முதல் இருபது சதவீதம் உயர்ந்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மறுபுறம் பணவீக்க விகிதத்தை குறைக்க அரிசி, ஏற்றுமதி, கோதுமை மாவு, பருப்பு உள்ளிட்ட சில உணவுப்பொருட்களை, ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது. இதனால் உள்நாட்டில் இருப்பு அதிகரிக்கும். இது விலையை கட்டுக்குள் வைக்க பயன்படும் என அரசு எதிர்பார்க்கிறது. இது தவிர பல ஏற்றுமதி பொருட்களுக்கான வரியையும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி குறையும் போது, வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
வரும் வாரங்களில் பண்டிகை காலம் தொடங்கும் போது, உணவுப்பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் தேவை அதிகமாகும் போது விலைவாசி மேலும் உயரும். பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதைத்தவிர தொழில் துறை குறியீட்டு எண் ஜூன் மாதம் 12.3 சதவீதமாக இருந்தது. ஆனால் ஜூலை மாதம் 2.4 சதவீதமாக கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் தொழில் துறை வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. பணவீக்கத்தை குறைத்து, கட்டுக்குள் வைக்க இந்திய ரிசர்வ வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே கொரோனா தொற்று காலத்திலிருந்து, இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு பொருளாதார பாதிப்புகள், விலைவாசி உயர்வு என பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் பொதுமக்களின் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகள் ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.








