புறநகர் ரயில் போக்குவரத்தை, சென்னையின் போக்குவரத்து தண்டுவடம் என அழைக்கலாம். அந்த அளவுக்கு நாள்தோறும் லட்சக் கணக்கான பயணிகள் புறநகர் ரயிலில் பயணிக்கின்றனர். புறநகர் ரயில்சேவை மட்டும் இல்லை என்றால், சென்னையே ஸ்தம்பித்து விடும் எனச் சொல்லலாம்.
புறநகர் ரயில்களில் பயணம் செய்வோரிடம் வசூலிக்கப்படும் கட்டணம் மூலம் சென்னை கோட்டத்துக்கு வரும் வருவாய், தெற்கு ரயில்வேயின் வருவாய் ஆதாரத்தின் முக்கிய பங்காகும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கையாள்வதற்கு வசதியாக, பல்வேறு நடவடிக்கைகளை சென்னை கோட்டம் எடுத்து வருகிறது.
சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள், ரயிலில் ஏறுவதற்கு மேம்பாலம் வழியாகத்தான் நடைமேடைக்கு வர முடியும். இதனைப் பின்பற்றாமல், சில ரயில் நிலையங்களில் இருப்புப் பாதையை ஆபத்தான நிலையில் பயணிகள் கடக்கும் நிலையும் இருந்தது.
பயணிகளின் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், சாலையிலிருந்து நேரடியாக நடைமேடைக்கு வரும் வகையில் புதிய அணுகு நடைமேடைகளை அமைத்தது சென்னை கோட்டம். இதனால் மேம்பாலத்தில் ஏறும் சிரமமோ, ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடக்கும் நிலையோ இல்லாமல் பயணிகளுக்கு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது தெற்கு ரயில்வே.
தாம்பரம் சானடோரியம், திரிசூலம், மீனம்பாக்கம் போன்ற ஒரு சில ரயில் நிலையங்களைத் தவிர மற்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் அணுகு நடைமேடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் மேம்பாலத்தில் ஏறும் சிரமம் குறைந்துள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இருப்பினும், இத்தனை நாட்களாக இதனை செயல்படுத்தாமல் தெற்கு ரயில்வே தாமதித்தது ஏனோ என்றும் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
தெற்கு ரயில்வேயின் புதிய முயற்சிக்கு பாராட்டும் தெரிவிக்கும் அதேவேளையில், அணுகு நடைமேடைகளில் மேற்கூரை கட்டப்படாததால், கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர். வெயில் மற்றும் மழையால் பயணிகள் அவதிப்படுவதை பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பயணிகளின் கோரிக்கையை அடுத்து, கிண்டி, மாம்பலம் போன்ற பயணிகள் அதிகம் வந்து செல்லும் நிலையங்களில் மட்டும் ஆங்காங்கே நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற ரயில் நிலையங்களில் பயணிகளின் போக்குவரத்து குறைவாக இருப்பதால், அங்கெல்லாம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை ரயில்வே நிர்வாக எடுத்துள்ளதாகவும் பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
புறநகர் ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அணுகு நடைமேடைகளில், மற்ற நடைமேடைகளில் இருப்பது போன்று மேற்கூரை அமைத்து பயணிகளின் சிரமத்தைப் போக்க வேண்டும் என புறநகர் ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.









