காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள்…

காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தவிர, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த உயர்மட்ட கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்துகின்றன.
இதற்கு செயற்குழுவும் ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளது.

ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஆற்றல் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை.

பிரதமரால் சாதிவாரி கணக்கெடுப்பைச் செய்ய இயலாது. காங்கிரஸ் ஆளும் 4 முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாஜக ஆளும் 10 மாநில முதல்வர்களில் ஒரே ஒருவர் தான் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர். எத்தனை பாஜக முதல்வர்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்?
​​

ராஜஸ்தா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும். ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் எந்தப் பிரிவுக்கு அதிக கவனம் தேவை என்பதை அறிய பொருளாதார ஆய்வு நடத்தப்படும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.