லிப்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி… கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத் லிப்டில் சிக்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் லிப்டின் கதவை உடைத்து பத்திரமாக மீட்டனர்.

கடலுார் தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத், வடலுாரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார். தொடர்ந்து, அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றனர். அப்போது, லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்று விட்டது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?” – கனிமொழி எம்.பி. கண்டனம்!

இதனையடுத்து விடுதி ஊழியர்கள், அவசர கால சாவியை பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது பயனளிக்காததை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லிப்டில் சிக்கியவர்களை மீட்ட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.

பின்னர் லிப்டில் இருந்த விஷ்ணு பிரசாத் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய லிப்டில் 6 பேர் சென்றதே, லிப்ட் பழுதாகி நின்றதற்கு காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.