காங்கிரஸ் மக்கள் நலத்திட்டங்களை தாமதப்படுத்துவதும், மக்களை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என குஜராத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரதமர் மோடி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நர்மா நதி நீரை குஜராத்தின் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் நல் திட்டங்களை தாமதப்படுத்துவது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளது.
சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்தினையும் காங்கிரஸ் கட்சி கிடப்பில் போட முயற்சி செய்தது. வழக்குகளின் மூலம் அந்த திட்டத்தினை காலம் தாழ்த்தியது. பனஸ்கந்தா மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை தடுக்க நினைத்த காங்கிரசினை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும். வாக்கு செலுத்தும் போது இதை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
மக்களுக்கு நலதிட்டங்களை செய்வதில் காங்கிரசுக்கு ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு வாய்ப்புகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும். எனது தலைமையிலான அரசு 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் 99 குடிநீர் சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பாஜக குஜராத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பிரதமர் மோடி கூறினார்.







