காங்கிரஸ் நிலையில்லா தன்மையை கொண்டுள்ளதாகவும், பாஜக தெளிவான பாதையை நோக்கி செல்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆம் ஆத்தி கட்சியும் இங்கு புதிதாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, பேசிய அவர், பாஜகவின் வேலை தெளிவாகவும், முன்னேற்றப் பாதையை நோக்கி செல்கிறது. ஆனால் காங்கிரஸ் நிலையில்லா தன்மையை கொண்டுள்ளது. எனவே, இமாச்சலத்திற்கு நிலையான பாஜக அரசுதான் தேவை என்றார். தேர்தல் செலவுக்காக பல ஆயிரம் கோடிகள் பல முறை வீணடிக்கப்பட்டது. பின்னர் மக்கள் நிலையான அரசு வேண்டும் என முடிவு செய்து 2014-ம் ஆண்டு பாஜகவை ஆட்சியில் அமர வைத்தனர். பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து சில இடங்களில் வெற்றி பெற்று தங்களது சுய நலத்திற்காக காங்கிரஸ் செயல்பட்டு வருகின்றனர் என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இமாச்சல மக்கள் வாக்களிக்க செல்லும் முன்பு பாஜக வேட்பாளரை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை நீங்கள் தாமரை சின்னத்தை நினைவில் வைத்திருந்தால் மட்டுமே போதுமானது என்றார். வெளிநாட்டில் இருந்து ஒரு மூட்டை யூரியா கொண்டு வர 2 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆனால் மத்திய அரசு அதை விவசாயிகளுக்கு 270 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. ஆனால் சிலர் 100 ரூபாய் மானியம் வழங்க ஆயிரம் ரூபாய் விளம்பரத்திற்கு செலவிடுகிறார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.








