நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ள சந்திரயான் 3ன் மூலம் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியில் பங்களித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியை நீல்வட்டப்பாதையில் சுற்றிய சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு பூமியை சுற்றிவந்த சந்திரயான் 3-ஆனது ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
இதனை அடுத்து மைல்கல் நிகழ்வாக ஆகஸ்ட் -5 ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான் 3 நுழைந்தது. பின்னர் நிலவை சுற்றிவந்த சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 17-ஆம் தேதி உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 5.44 மணி அளவில் சந்திரயான் 3-ன் கடைசி கட்ட பணிகள் தொடங்கியது. இதனிடையே தென்ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்தவாறு சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதை காண நேரலையில் இணைந்தார். அப்போது நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வந்தது.
அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது. அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்” என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சரித்திர சாதனை படைத்துள்ளது.
வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
”புதிய நம்பிக்கை பிறந்துள்ளது ” – பிரதமர் மோடி வாழ்த்து
சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதன் மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது் . இந்தியா வரலாறு படைத்ததை பார்த்து விட்டோம். புதிய இந்தியா உச்சம் தொட்டதின் சாட்சியாக நாம் இருக்கிறோம். நிலவு தொடர்பாக கூறப்பட்ட கதைகள் அனைத்தும் இனி மாறும். இந்தியாவின் விண்வெளித்துறைக்கு இது ஒரு வரலாற்று நாள். இந்த வெற்றி நமது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கும் “ என பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள் – ராகுல் காந்தி எம்.பி
சந்திரயான் -3 நிலவின் தென்துருவத்தில் முதன்முதலாக கால் பதித்திருப்பது, இந்திய அறிவியல் சமூகத்தின் பல தசாப்தகால அபார திறன் மற்றும் கடின உழைப்பின் விளைவாகும்; 1962ம் ஆண்டு முதல் இந்திய விண்வெளித்துறையின் திட்டங்கள் புதிய உயரங்களை எட்டி வருவதோடு இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் உள்ளது என ராகும்காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவிற்கு வாழ்த்துகள்! சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியா ஒரு மகத்தான சாதனை படைத்துள்ளது. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொன்னான அத்தியாயம் – ப.சிதம்பரம் வாழ்த்து
இந்திய மக்கள் அனைவரும் சந்திரயான்-3 வெற்றிக்காக பெருமிதம் கொள்வதுடன், இத்திட்டத்தில் பணியாற்றிய நமது விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை மனதார வாழ்த்துகிறோம். ஆர்யபட்டாவுடன் தொடங்கிய நமது விண்வெளி ஆராய்ச்சியில் தற்போது சந்திரயான் -3ன் வெற்றி மூலம் இஸ்ரோ ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதியுள்ளது; இந்த வெற்றியானது இதுவரை எந்த மனிதனும் எட்டாத உயரத்தை அடைய நம்மை ஊக்குவிக்கட்டும் என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரச்சூட் வாழ்த்து :
இஸ்ரோவின் மகத்தான சாதனை ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமையடைய வைத்துள்ளது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டம் வெற்றி பெற்றதன் மூலம் நிலவில் கால் பதித்த நாடுகளின் வரிசையில் நமது நாடும் இடம் பெற்றுள்ளது அதைவிட மிக முக்கியம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளோம்.
இந்த நாட்டின் ஒரு குடிமகன் என்ற வகையில் மகத்தான சாதனையை நான் இன்று பார்த்தேன். இந்த சாதனை புதிய ஆய்வுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும் இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய மைல்கல் என – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரச்சூட் தெரிவித்துள்ளார்.







