சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே கிடைத்த வெற்றி, அடுத்த இலக்கு சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதுதான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தட்டிச் சென்றுள்ளது.
இந்நிலையில், நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கும் நிகழ்வை காண தென் ஆப்பிரிக்காவில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இணைந்திருந்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். அப்போது தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ’’சரித்திர சாதனையை இன்றைக்கு இந்தியா படைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திட்டத்தின் மூலம் புதிய இந்தியாவை உருவாக்கியுள்ளது. நிலவில் இந்தியாவின் காலடி பதிக்கப்பட்டிருப்பதற்கு ஒட்டுமொத்த இந்தியாவை உற்சாகம் அடைய வைத்து இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் இதனால் உற்சாகம் பொங்கிக்கொண்டு இருக்கிறது. சரித்திர சாதனையைப் படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன்.
நிலவின் தென் துருவத்தை சந்திரயான் 3 அடைந்ததன் மூலமாக யாருமே பெறாத வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நிலா.. நிலா.. ஓடிவா’ என்ற பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகள் உண்மையாக்கி இருக்கிறார்கள்.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே கிடைத்த வெற்றியாகும். நமது அடுத்த இலக்கு என்பது நிலவுக்கு மனிதனை அனுப்புவதாகும். இஸ்ரோ மாபெரும் சாதனையை தற்போது படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தையும் விரைவில் அனுப்ப உள்ளோம்” என்று தெரிவித்தார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.







