சென்னை சோழிங்கநல்லூர் முதல் மாதவரம் வரை செல்லக் கூடிய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முறையாக திட்டமிடப்படாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர் முதல் மாதவரம் வரையிலான மெட்ரோ ரயில் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 45.8 கி.மீ தொலைவிற்கு அமையும் இந்த வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரம் நிலத்திற்கு அடியில் பாதை அமைக்கப்படுகிறது. சோழிங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலாம்பாக்கம், மடிப்பாக்கம் என 50 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டாலும், அது முறையாக நடைபெறவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் பணிகளுக்கான முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால், குறுகிய சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அளவுக்கு அதிகமான வாகனங்கள் ஒரே சாலையை பயன்படுத்துவதால் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அதிலும் குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் உருவாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள் : ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – அடையார் கள நிலவரம்
நாள்தோறும் குண்டும் குழியுமான சாலைகளை கடந்து செல்வதால் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுவதையும் பார்க்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்திருக்கும் சாலைகளை தற்காலிகமாக சீரமைத்து தருவதோடு, மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மெட்ரோ ரயில் பணியால், வானுவம்பேட்டை பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீண்டகாலமாக நடைபெறும் பணியால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் அவசியம் என்றாலும், திட்டமிடப்படாத, முறையான ஒருங்கிணைப்பு இல்லாத பணிகளால் பொதுமக்கள் நாள்தோறும் பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உரிய திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :








