மோதல் அல்லது அமைதி ; எதற்கும் பதிலளிக்க தயார் – அமெரிக்காவை கடுமையாக சாடிய கிம் ஜாங் உன்….!

அமெரிக்கா, பயங்கரவாதத்தையும் படையெடுப்புகளையும் மேற்கொண்டு வருவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் குற்றம் சாட்டினார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  வட கொரியாவின் உச்ச மக்கள் பேரவையில் நேற்று பேசிய கிம் ஜாங் உன், அமெரிக்கா பல்வேறு பிராந்தியங்களில் “பயங்கரவாதத்தையும் படையெடுப்புகளையும்” மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு நாட்டின் கண்ணியம், நலன் மற்றும் இறுதி வெற்றி ஆகியவற்றை மிகவும் சக்திவாய்ந்த அரசால் மட்டுமே உறுதி செய்ய முடியும். எதிரிகள் மோதலைத் தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது அமைதியான சகவாழ்வைத் தேர்ந்தெடுக்கிறார்களா என்பது அவர்களுடைய விருப்பம், மேலும் எந்தவொரு தேர்வுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வட கொரியா, அணு ஆயுத நாடாகத் தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்திக் கொள்ளும். அதேவேளையில், விரோத சக்திகளின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் முறியடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.

வட கொரியா, தென் கொரியாவை மிகவும் விரோதமான நாடாக ‘அதிகாரப்பூர்வமாக’ அங்கீகரித்துள்ளதுடன், மிகத் தெளிவான கருத்துக்கள் மற்றும் செயல்கள் மூலம் அதனை முற்றிலுமாகப் புறக்கணித்து அலட்சியப்படுத்தும்.  பியாங்யாங்கை, சியோல் தூண்டிவிட்டால் ‘இரக்கமற்ற’ விளைவுகள் ஏற்படும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.