பப்ஜி விளையாட்டின்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சக நண்பரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பாக உருவாகி வருகிறது. குறிப்பாக ரம்மி விளையாட்டு, பப்ஜி போன்ற விளையாட்டுகள் முதலில் விளையாட்டாக தொடங்கி பின்னர் உயிரை பறிக்கும் ஆயுதமாக மாறுகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் விளையாட்டுகளின் மோகம் குறைந்த பாடில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ‘பப்ஜி’ (PUBG) விளையாட்டை சுமார் 30 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் உலகளவில் சுமார் 5 கோடி பேர் விளையாடிவருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 20-லிருந்து 24 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில் சுமார் 58% பேர் பப்ஜி விளையாட்டைத் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், 52% பேர் ஏற்கனவே அந்த விளையாட்டை பயன்படுத்திவருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 12% பேர் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்துக்கு மேலாக பப்ஜி விளையாடிவருவதாகவும், 18% பேர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்தை அதில் செலவழிப்பதாகவும் கூறியுள்ளனர். 31% பேர் தாங்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டதாக உணர்வதாகவும், 20% பேர் இந்த விளையாட்டு இல்லாமல் ஒருவாரம் கூட தங்களால் இருக்க முடியாது என்றும் கூறுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பப்ஜி என்பது விளையாட்டாக மட்டுமே சென்றால் இந்த ஆய்வுகள் அவசியமற்றதாக இருந்திருக்கும். ஆனால் அது விளையாட்டை தாண்டி உயிரை பறிக்கும் ஆயுதமாகவும் மாறுகிறது. பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்தவர்கள், பப்ஜி விளையாட முடியாதவர்கள், விளையாட்டின் போது நண்பர்களுக்கு இடையே தகராறு என பல்வேறு வழிகளில் இந்த விளையாட்டு விளையாடுபவர்களுக்கு எமனாக வந்துவிடுகிறது.
அந்த வரிசையில் திருவள்ளூர் அருகே பப்ஜி விளையாட்டின் போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சக நண்பரை கத்தியால் குத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை அடுத்த கூடப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் தனது நண்பர் சசிகுமாருடன் சேர்ந்து வீட்டின் அருகே பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர்.
விளையாட்டிற்கு இடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஜித் குமார் தனது சகோதரர்களை வரவைத்து சசிகுமாரை கத்தியால் குத்தியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அஜித்குமாரும் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், செல்வம், சாமுவேல், அபிலேஷ் மற்றும் விஜயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்